பழனி அருகே கன ஜோராக நடைபெறும் “தார்” திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக தினந்தோறும் தார் திருட்டு நடைபெற்று வருகிறது. அதாவது பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில், வேல்ஸ் கார்டன் கலிக்க நாயக்கன்பட்டி DTCP அப்ரூவல் என்ற பெயர் பலகையுடன் உள்ள காலி மனைகள் உள்ளது. அதன் உள்ளே தென்னை மரங்களுடன் உள்ள இடத்தில், வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்ட சிறிய கட்டிடம் உள்ளது. அங்கே திருச்சி பகுதியில் தார் மற்றும் டீசல் திருட்டில் ஈடுபட்டு பல்வேறு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழ்மணி என்கிற மணிகண்டன், அவரது பாட்னர் விக்கி இருவரும், TN 24 B 6428 என்கிற எண் DOST வாகனத்தை நிறுத்தி வைத்து, அந்த வாகனத்தில் திருடப்பட்ட தார் நிரப்பப்பட்ட பேரல்களை சேமித்து வைத்துள்ளனர்.

மேலும் கொச்சியிலிருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லும் டேங்கர் லாரி டிரைவர்கள் துணையுடன், விக்கி என்பவர் தலா ஒவ்வொரு லாரியிலும் இரண்டு மூன்று பேரல்கள் எனத் திருடி, தினந்தோறும் 50 முதல் 100 பேரல்கள் திருடி சேர்த்து வைக்கின்றனர். லாரி டிரைவர்களுக்கு பேரலுக்கு 8,500 ரூபாய் கொடுத்து விடுகின்றனர். இவ்வாறு திருடப்பட்ட தார் பேரல்களை திருச்சிக்கு கொண்டு சென்று, தமிழ்மணி என்கிற மணிகண்டன் கள்ளச் சந்தையில் 13,500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். இந்த தார் மற்றும் டீசல் திருட்டு தொழிலை பல வருடங்களாக செய்து வருபவர் தான் தமிழ்மணி என்கிற மணிகண்டன்.

திருச்சி சிறுகனூர் பகுதியில் தார் மற்றும் டீசல் திருட்டில் சம்பாதித்த பணத்தில், பழனி ஆயக்குடி பகுதியில் வேல்ஸ் கார்டன் இடத்தை வாங்கி ரியல் எஸ்டேட் அதிபாராக வலம் வருகிறார் என்கின்றனர் அப்பகுதியினர்.

திருச்சி சிறுகனூர் பகுதியில் மேற்படி திருட்டின் மூலம் பல கோடிகளை சம்பாதித்த ருசியில், திருட்டு தொழிலை பல மாவட்டங்களில் விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் கன ஜோராக தார் திருட்டு தொழிலை செய்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவரும் தமிழ்மணி என்கிற மணிகண்டன், விக்கி ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பழனி துணை கண்காணிப்பாளர் செல்வக்குமார் ஆகிய இருவரும் இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். பொது மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார்களா ? காத்திருப்போம்..!
_ கே.எம்.எஸ்




