“அருள்வான்” திரைப்படத்தின் விமர்சனம்

90 பிக்சர்ஸ் புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் எஸ்.ஜீ. சரவணன் தயாரிப்பில், அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, ஜான் விஜய், காளி வெங்கட், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், கணேஷ் விநாயகம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “அருள்வான்”.
கதைப்படி.. தேனி மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் காடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். படிப்பறிவு இல்லாத அந்த மக்களை அங்கிருந்து வனத்துறை அதிகாரி ஜான் விஜய் விரட்ட நினைக்கின்றார். கந்தன் ( ஆரவ் ), அமரவள்ளி ( ரம்யா பாண்டியன் ) தம்பதியரின் மகள் குறிஞ்சி ( பேபி கிருத்திகா ) படிக்க வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார். கலெக்டரை பார்த்தால் தங்கள் பகுதிக்கும் பள்ளிக்கூடம் வரும் என்பதையும் தெரிந்து கொள்கிறார். அங்குள்ள சூழ்நிலை அவளது எண்ணத்துக்கு மாற்றாக இருப்பதால், யாருக்கும் தெரியாமல் அடிவாரத்தில் உள்ள தேனிக்கு வருகிறார்.

இவள் பேசும் மொழி யாருக்கும் தெரியாததால், திக்கு திசை தெரியாமல் அங்கும் இங்கும் அழைந்து பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்டு, விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார்.
குறிஞ்சி கலெக்டரை சந்தித்தாரா ? அவள் விரும்பிய கல்வி கிடைத்ததா ? இல்லையா ? என்பது மீதிக்கதை..
கல்வி என்பது அனைவருக்கும் சமம், எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

ஆரவ் பழங்குடியினர் கதாப்பாத்திரத்தில் மகளின் கனவை நிறைவேற்ற முடியாத இயலாமையால், பாசத்தால் துடிக்கும் தந்தையாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் ரம்யா பாண்டியன் மலைவாழ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.

இரண்டாம் பாதியில் அருள்நிதி தோன்றினாலும், மாவட்ட ஆட்சியராக அதிகாரம் என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை நடிப்பின் மூலம் உணர்த்தியிருக்கிறார். மலைவாழ் குழந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் உணர்ச்சியின் உச்சம். அருள்நிதியின் எதார்த்தமான நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. சமூகத்தில் இவரைப் போன்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என, அந்த காதாப்பாத்திரம் பார்வையாளர்களோடு கனெக்ட் ஆகும் விதம் சிறப்பு.




