Uncategorized

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாசமாக கராத்தே பயிற்சி வீடியோ ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் கராத்தே பயிற்சி அளிக்கும் போது மாணவிகளை ஆபாசமாக தொட்டு பயிற்சி அளிக்கும் வீடியோவை சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனம் எழுந்துள்ளது. இதனிடையே நாற்காலி செய்தி இணையதளத்தில் ஆபாசமாக தொட்டு பயிற்சி அளிப்பது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதன் தொடர்ச்சியாக ஆபாசமாக பெண்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்கும் சம்பவத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் கொங்கு ராஜேந்திரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் என்பது பண்பாடு கலாச்சார மிக்க மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்று தனி மனிதன் ஒழுக்கம் குறைவாக உள்ள காரணத்தால் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது. மேலும் பெண் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கராத்தே கற்றுக் கொடுப்பதை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வரவேற்கின்றோம். ஆனால் அவையே பெண் குழந்தைகளுக்கு பாலியல் தூண்டும் வகையில் கொடுக்கப்படும் கராத்தே பயிற்சியை வன்மையாக கண்டிக்கின்றோம். இது போன்று பயிற்சி அளிக்கும் கராத்தே ஆசிரியர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இது போன்று கராத்தே பள்ளிகளுக்கு சென்று காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு கராத்தே பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களின் விபரங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பிற்காக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருப்பது போல் மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் இந்து பரிவார் கூட்டமைப்பு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், திருப்பூரில் தனியார் தற்காப்பு கராத்தே பயிற்சி மையத்தில் பெண் குழந்தைகளை பயிற்சி என்ற பெயரில், தொடக் கூடாத இடங்களில் தொட்டு பயிற்சி அளிக்கிறேன் என்ற போர்வையில் மிகவும் கேவலமான செயலில்  ஈடுபட்ட நபர்களை இந்து பரிவார் கூட்டமைப்பு பாரதமாதா இந்து மக்கள் இயக்கம் மிக வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தில் இரண்டு வயது குழந்தை முதல்‌ 70 வயது பாட்டி வரை பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டு வரக்கூடிய நேரத்தில் தற்காப்பு பயிற்சி என்ற போர்வையில், இது மாதிரியான செயல்களை காவல்துறையினர் உடனடியாக இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அந்த தனியார் தற்காப்பு கராத்தே பயிற்சி மையத்தை உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button