காவல்துறைக்கு சவால் விட்ட நிலமோசடி கும்பல் கைது ! நடந்தது என்ன ? உண்மையும், பின்னணியும் !

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரத்தின் அசுர வளர்ச்சி இன்று ஹைடெக் சிட்டியான பெங்களூரை காட்டிலும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தொழில் புரட்சி ஏற்பட்டாலும் தொழிலதிபர்களை ஏமாற்றி கல்லா கட்டும் சில ஏமாற்று பேர்வழிகளும், மக்களோடு மக்களாக கலந்து தங்களை ஏதோ பிரபல ரியல் எஸ்டேட் அதிபர்களை போன்று காண்பித்துக் கொண்டாலும், அதில் சில அப்பாவி தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் பிடுங்குவதும், சில தொழிலதிபர்களிடம் இவர்களின் செயல்பாடு முரண்பட்டதாக தெரிய வரும்போது அந்த தொழிலதிபர்கள் இவர்களை கழட்டி விடுவதும் அன்றாட நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. கோவை மாநகர தொழிலதிபர்களிடம் உங்களுக்கு இடம் வாங்கி தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி லட்சக்கணக்கில் ஏமாற்றிய இரண்டு நபர்களை இரவோடு இரவாக, C 6 துடியலூர் காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சரி விஷயத்திற்குள் வருவோம்..!
கோவை மாநகரத்தில் துடியலூர் ஐடிஐ அருகே உள்ள ஜி.என். மில்ஸ் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அத்துடன் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலம் வாங்குவதற்காக பொருத்தமான இடங்களைத் தேடிக் கொண்டிருந்த பொழுது சந்தர்ப்ப சூழ்நிலையில் கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவரை சந்திக்க நேரிட்டுள்ளது. அப்போது சரவணன், தான் ரியல் எஸ்டேட் தரகர் தொழில் செய்து வருவதாக கூறியுள்ளார். அத்துடன் பீளமேடு பகுதியில் வசித்து வரும் வெங்கடாசலபதி என்பவரையும் கோவையில் வழக்கறிஞராக இருக்கிறார் என்று அறிமுகப்படுத்தி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் சரவணன், வெங்கடாசலபதி ஆகிய இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜெகநாதனை நேரில் சந்தித்துள்ளனர். பின்னர் எங்களிடம் நாராயண சுவாமி நாயுடு என்பவருக்கு, பல்வேறு முக்கிய பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க அசையா சொத்துக்கள் இருப்பதாகவும், அவற்றில் சுங்கம் ராம் நகரில் 8 ஏக்கர், சவுரிபாளையம் பகுதியில் 17 ஏக்கர் நஞ்சுண்டாபுரம் பகுதியில் 13 ஏக்கர், சுங்கம் பைபாஸ் பகுதியில் 13 ஏக்கர் உள்ளிட்ட பல சொத்துக்கள் இருப்பதாக ரியல் எஸ்டேட் அதிபர் ஜெகநாதனிடம் கூறியுள்ளனர். அத்துடன் நாராயணசாமி நாயுடுவின் உயில் வழியாக உரிமை பெற்ற நபர்கள் நாங்கள் தான். மேலும் அவற்றில் ஒன்றான சிவராம் நகரில் அமைந்துள்ள சுமார் 8 ஏக்கர் நிலத்தை எனக்கு கிரையம் செய்து தருவதாக சரவணன் மற்றும் வெங்கடாசலபதி ஆகிய இருவரும் உறுதியளித்துள்ளனர்.
அதன் பின்னர் மேற்கண்ட நிலத்திற்கான ஆவணங்களை காண்பித்து, அச்சொத்தில் எந்தவித உரிமை பிரச்சனையோ, வில்லங்கமோ இல்லை என்றும், அச்சொத்தினை விற்பனை செய்வதற்கான முழுமையான மற்றும் செல்லத்தக்க அதிகாரம் எங்கள் இருவருக்கும் இருப்பதாகவும், ஏதேனும் உரிமை பிரச்சனையோ அல்லது வில்லங்கமோ இருந்தால் அதனை தீர்த்து வைத்து ஜெகநாதனுக்கு கிரையம் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
மேற்படி சரவணன், வெங்கடாசலம் கூறிய தகவல்களையும், அவர்கள் காண்பித்த ஆவணங்களையும் நம்பி அவை அனைத்தும் உண்மையானவை என கருதி மேற்கண்ட நிலத்தை ஜெகநாதன் கிரயம் செய்வதற்கு கடந்த 20/1/2026 அன்று ஆர்.எஸ். புரத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிலிருந்து தனது கணக்கிலிருந்து RTGS மூலமாக ரியல் எஸ்டேட் புரோக்கர் வெங்கடாசலம் வங்கி கணக்கிற்கு ரூபாய் 1000000 ( 10 லட்சம் ) பண பரிமாற்றம் செய்துள்ளார். அன்றைய தினமே மதியம் சுமார் 2 மணி அளவில் கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து ரூபாய் 5000000 ( ரூபாய் 50 லட்சம் ) வெங்கடாசலபதியுடம் ரொக்கமாக முன்பணம் வழங்கியுள்ளார். இவ்வாறு மொத்தம் 60 லட்சம் ரூபாய் தொகையை சரவணன் மற்றும் வெங்கடாசலபதி பெற்றுக் கொண்டுள்ளனர்.

அதன்பிறகு பலமுறை ஆவணங்களின் நகல்களை கேட்ட ஜெகநாதன் கேட்டபோதும் அவற்றை வழங்க இருவரும் மறுத்துவிட்டார்களாம். மேற்கண்ட நிலத்தை எனது பெயரில் பதிவு செய்து தராமலும், தான் முன்பனமாக வழங்கிய தொகையையும் திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்யும் நோக்கத்துடன், சரவணன் மற்றும் வெங்கடாசலபதி இருவரும் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
கடந்த 25 /6 /2026 அன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் தொப்பம்பட்டி பிரிவு அருகே சரவணன் மற்றும் வெங்கடாசலபதி ஆகிய இருவரும் இருப்பதை தெரிந்துகொண்டு ரியல் எஸ்டேட் அதிபர் ஜெகநாதன் நேரில் சென்று மேற்படி நபர்களிடம் தனக்கு வழங்க வேண்டிய பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது சரவணன் மற்றும் வெங்கடாசலம் ஆகிய இருவரும் தேவிடியா மவனே பணம் கேட்டுகிட்டே இருந்தா உன்னை இங்கேயே போட்டு விடுவேன் என்று கூறினார்களாம். இதனால் ரியல் எஸ்டேட் அதிபர் ஜெகநாதன் மிகவும் பயந்து போய்விட்டாராம். பின்னர் சம்பவத்தை தனது நண்பர்களிடம் கூறினாராம். சரவணன் மற்றும் வெங்கடாசலபதி ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர்கள் மீது ஏற்பட்ட அச்சத்தின் காரணத்தினாலும் பிரச்சனையை அன்று பெரிதுபடுத்த விரும்பாத காரணத்தினாலும் அன்றைய தினம் துடியலூர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் செய்ய வில்லையாம். அதன் பின்னர் தனது தொழில் நண்பரான சிவதாஸ் என்பவரிடத்தில் மேற்கண்ட பிரச்சனையை கூறி புலம்பியுள்ளார் ஜெகநாதன். உடனே சிவதாஸ் என்பவர் ஆறுதல் கூறவே ஆலோசனையும் வழங்கி உள்ளார். பின்பு ரியல் எஸ்டேட் அதிபர் ஜெகநாதன், ரியல் எஸ்டேட் புரோக்கர்களான சரவணன் மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் மீது மேற்படி நபர்களை நம்பி நான் ரூபாய் 60 லட்சத்தை வழங்கியதால் எனக்கு பெரும் பொருளாதார இழப்பும் மிகுந்த மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே சரவணன் மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் ஆரம்பத்தில் இருந்து உண்மைக்கு புறம்பான தகவல்கள என்னிடத்தில் கூறி தங்களுக்கு இல்லாத அதிகாரம் இருப்பதாக பொய்யாக நம்ப வைத்து ஆவணங்களை காண்பித்து என்னிடம் நம்பிக்கை ஏற்படுத்தி என்னிடமிருந்து ரூபாய் 60 லட்சம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
எனவே மேற்படி ரியல் எஸ்டேட் புரோக்கர்களான சரவணன் மற்றும் வெங்கடாசலபதி ஆகியோர் மீது சட்டப்படி உரிய வழக்கு பதிவு செய்து முழுமையான விசாரணை நடத்தி அவர்கள் மீது பொருந்தக்கூடிய சட்ட பிரிவுகளின் கீழ் தக்க நடவடிக்கை எடுப்பதோடு, என்னிடமிருந்து மோசடியாக பெற்ற ரூபாய் 60 லட்சத்தை சட்டப்படி மீட்டு தருமாறு சி.6 துடியலூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட துடியலூர் காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 316 ( 2 ) 318(4) 296(b) 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளான சரவணன் மற்றும் வெங்கடாசலம் ஆகியோரை தேடி வந்தனர்.

இந்நிலையில் ரியல் எஸ்டேட் புரோக்கர் வெங்கடாசலம் முதலில் துடியலூர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். அவரிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டு உடனடியாக கோவை மத்திய சிறைசாலையில் அடைத்துள்ளனர். பின்பு இன்னொரு ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆன சரவணன் என்பவரை வலை வீசி தேடிய பொழுது அவரது வீட்டிற்குள் மறைமுகமாக இருந்தது தெரிய வந்தது அவரையும் கைது செய்து கோவை மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பியுள்ளனர்.
இதில் என்ன விசேஷம் என்றால்…. ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆன வெங்கடாசலம் தன்னை ஒரு பிரபல வக்கீல் என்றும் கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்து வருவதாக அக்கம் பக்கத்தில் பீலா விட்டு உள்ளாராம். அதே நேரத்தில் தான் குடியிருக்கும் பீளமேடு பகுதியில் ஒரு பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறாராம். அந்த குடியிருப்பு அருகே உள்ள லாண்டரி கடையில் நமக்கே உரித்தான பாணியில் விசாரித்த பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் நமக்கு கிடைத்தன.
பிரபல அந்த அடுக்குமாடி குடியிருப்பில் எப்படி இந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் குடி வந்தார் என்று அந்த லாண்டரிக்கடை வாடிக்கையாளர்களிடம் நாம் கேட்ட பொழுது… அவர் கோயம்புத்தூர் கோர்ட்டில் பெரிய லாயர் என்று எங்களிடம் கூறுவார். அதே நேரத்தில் அவரைத் தேடிச் செல்லும் பிரமுகர்கள் அந்த லாண்டரி கடையில் இருந்து கொண்டு போன் செய்தால் உடனே அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியில் வரும் வெங்கடாசலம் பேச வேண்டியதை பேசிவிட்டு எவ்வளவு கொண்டு வந்துள்ளீர்கள் என்று அதை வாங்கிக்கொண்டு மறுபடியும் நான் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்று அவசர அவசரமாக ஓடி ஒளிந்து விடுவாராம். இப்படி நாளொரு மேனியும பொழுதொரு வண்ணமாக வக்கீல் என்ற போர்வையில் நாடக மாடிக் கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் வேடிக்கையாக பார்த்து உள்ளனர்.
கோவையில் இருந்து வெளியாகும் சில தினசரி நாளிதழ்களில் சரவணன் மற்றும் வெங்கடாசலம் புகைப்படத்துடன் செய்தி வந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் மூக்கில் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டுள்ளனர். இந்த டுபாக்கூர் வக்கீல் வெங்கடாசலம் மற்றும் சரவணன் மீது காவல்துறையினர் இன்னும் தீவிரமாக விசாரணை செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் பல சமூக ஆர்வலர்கள்
– நமது நிருபர்


