அரசுக்கு செலுத்த வேண்டிய 1,600 கோடி குத்தகை பணத்தை வசூலிக்காத அதிகாரிகள் ! கண்டுகொள்ளாத சேலம் மாவட்ட ஆட்சியர் !

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், ஆட்சியர் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குறைதீர்ப்பு கூட்டங்களில் விவசாயிகளின் குறைகள் முழுமையாக தீர்த்து வைக்கப்படுகிறதா ? என்றால் பெயரளவுக்குத்தான் நடைபெறுகிறது என வேதனையுடன் குமுறுகின்றனர் சேலம் மாவட்ட விவசாயிகள்.
கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில், மலை பகுதிகளில் மேய்ச்சல் நிலங்களுக்கு பட்டா வழங்கியதால், தனிநபர்கள் இடங்களை விற்பனை செய்துள்ளனர். இதனால் மலைகளே காணாமல் போய் விட்டது. உதாரணமாக எஸ்.ஆர்.டி என்கிற தனியார் நிறுவனம் 1987 ஆம் ஆண்டு முதல் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து இப்பகுதியில் சுரங்கம் தோண்டி முறைகேடாக கனிம வளங்களை எடுத்து வருகிறது. ஆண்டுதோறும் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 1600 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளதாக தெரியவருகிறது. அரசு அதிகாரிகள் வருடந்தோறும் வசூலிக்க வேண்டிய பாக்கித்தொகையை வசூலிக்காமல் தனியார் நிறுவனத்துக்கு உடந்தையாக செயல்படுகின்றனர்.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நடைபெறுகிறதே தவிர, இந்த எஸ்.ஆர்.டி தனியார் நிறுவனமும், அரசு அதிகாரிகளும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தங்கள் தொழிலை தொடர்ந்து வருகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்தி, அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பணத்தை வசூல் செய்ய வேண்டும். கனிம வளங்கள் எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்தி, இயற்கை வளங்களை பாதுகாத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறியுள்ளனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் பதில் கூறுகையில், விவசாயிகள் கனிம வளங்கள் பற்றி பேச வேண்டாம். விவசாயத்திற்கும் கனிம வளங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பேசி விவசாயிகளை வெளியே அனுப்பியிருக்கிறார்.
இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்களுக்கு மாற்றாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, கனிம வளங்களை பாதுகாத்து, தனியார் நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பணத்தை வசூலிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதுசம்பந்தமாக தவறு செய்த கனிம வளத்துறை அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




