மாவட்டம்

பழனி அருகே.. டேங்கர் லாரிகளில் ஆபத்தான கெமிக்கல்ஸ், தார், டீசல் திருடும் கும்பல் ! துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

பழனி அருகே பெட்ரோல், டீசல், தார், கெமிக்கல்ஸ் போன்ற எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை, டேங்கர் லாரிகளில் கள்ளத்தனமாக, டிரைவர்களின் துணையோடு சீல் உடைக்கப்பட்டு தொடர் திருட்டில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கும்பலை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது சம்பந்தமாக விசாரித்தபோது ஆதாரங்களுடன் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அனுப்பம்பட்டி பிரிவு பரிபூரண சச்சிதானந்த ஆசிரமத்திற்கு பின்புறமுள்ள தென்னந்தோப்பில் ரவி என்பவர் மிகப்பெரிய அளவில் செட் அமைத்து, டீசல், தார், கெமிக்கல்ஸ், பெட்ரோல் போன்றவற்றை டேங்கர் லாரி டிரைவர்களிடம் குறைந்த விலையில் திருட்டுத்தனமாக வாங்கி ( டேங்கர் லாரிகளில் சீல் உடைத்து ) சேமித்து வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்.

இதற்கு முறையான ஆவணங்களும் அனுமதியும் இல்லாமல், ஆபத்தான எளிதில் தீ பற்றக்கூடிய மெத்தனால் ஆல்கஹால் போன்றவற்றையும் சேமித்து வைத்து விற்பனை செய்து வருகிறார். ரவி போன்ற ஒருசில நபர்கள் திருடி கொடுத்த மெத்தனால் போன்ற திரவத்தால் தான், கள்ளச்சந்தையில் விற்பனையாகி கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்களுக்கு காரணமாக அமைந்தது. அதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் எங்கும் நடைபெறக்கூடாது.

மேலும் இவர் திருடும் டீசல், பெட்ரோல் கலப்பட டீசலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் காவல்துறையினர் மெத்தனப் போக்கை கடைபிடிக்காமல், துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இது சம்பந்தமாக உணவுக்கடத்தல் தடுப்பு பிரிவு, சட்டம் ஒழுங்கு, மது விலக்கு, மாவட்ட OC WING என அனைத்து காவல் பிரிவும் ஒன்றுபட்டால் மட்டுமே ரவி போன்ற சமூக விரோத திருட்டு கும்பலை ஒழிக்க முடியும் என்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பழனி துணை கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் நடவடிக்கை மேற்கொள்வார்களா ? காத்திருப்போம்…

_ கே.எம்.எஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button