ஆர்.ஜே.பாலாஜி “வீட்ல விசேஷம்” அழைக்கிறார் போனி கபூர்
எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் ஆகிய வெற்றிப் படங்களில் தனது நடிப்புத் திறமையால் மக்களின் கவனத்தை ஈர்த்த ஆர்.ஜே.பாலாஜி, தற்போது நடித்து இயக்கியுள்ள படம் “வீட்ல விசேஷம்”
நடிகை ஶ்ரீதேவியின் கனவர் போனி கபூர், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், நடிகர் சத்யராஜ், நடிகை ஊர்வசி, கே.பி.எஸ்.லலிதா, அபர்ணா பாலமுரளி ஆகியோருடன் ஆர்.ஜே.பாலாஜி நடித்து, சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஆர்.ஜே.பாலாஜியை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குனர் சுந்தர்.சி, மற்றும் பல வெற்றிப் படங்களை இயக்கிய பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு “மக்கள் இயக்குனர்” என்னும் விருது வழங்கி கௌரவித்தனர். மேலும் நடிகை ஊர்வசி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி மற்றும் படக்குழுவினர் தங்களின் சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது… தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல குடும்பப் படமாக “வீட்ல விசேஷம்” ஜுன் 17-ல் வெளியாக இருக்கிறது. வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ள இந்தப் படம் குடும்பத்தினரோடு பார்த்து மகிழும் பொழுதுபோக்கு படமாக நிச்சயம் இருக்கும். இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகும் குடும்பப் படம் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் மத்தியிலும் நல்லதொரு வரவேற்பு இருக்கிறது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே லாபகரமாக படத்தின் அனைத்து உரிமைகளும் விற்பனை ஆகியுள்ளது என்று சந்தோஷத்துடன் கூறினார் ஆர்.ஜே.பாலாஜி.
இந்தப் படம் ஏற்கனவே “பதாய் ஹோ” என்ற பெயரில் இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் உரிமையை வாங்கி தற்போது தமிழில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.