பாலியல் குற்றவாளிகளை பலி வாங்கிய பெண் மருத்துவர் ! “நிழல்” படத்தின் விமர்சனம்

ஏ.கே. குமார் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ஜனனி, விசாகன், ரமேஷ் கண்ணா, சபிதா ஆணந்த், சிவன் சீனிவாசன், கௌசிக், திவ்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “நிழல்”.
கதைப்படி.. குடித்துவிட்டு கார் ஓட்டும் இளைஞரை கொடூரமான முறையில் தாக்குகிறார் ரம்யா ( ஜனனி ). அதேபோல் மேலும் இரண்டு இளைஞர்கள் மது போதையில் இருக்கும்போது அடுத்தடுத்து தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இவர்கள் மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் மூவரும் போதையில் பெண்களை அனுபவித்துவிட்டு கொடூரமாக சித்ரவதை செய்தவர்கள் என காட்சிகள் நகர்கிறது. அதே மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார் ரம்யா.

இதற்கிடையில் தந்தை ரமேஷ் கண்ணா நடத்தும் மளிகைக் கடைக்கு சரக்கு வாங்குவது, வியாபாரத்தில் தந்தைக்கு உதவியாக பொறுப்பான மகளாக வலம்வரும் ரம்யா, காவல் உதவி ஆய்வாளர் விசாகனை காதலிக்கிறார்.
காமக்கொடூரர்களை ரம்யா தேடிச்சென்று தாக்குதல் நடத்த என்ன காரணம் ? எதற்காக இந்த போராட்டம் ? இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் அவரது காதல் கை கூடியதா ? இல்லையா ? என்பது மீதிக்கதை..

படத்தில் இரட்டை வேடத்தில் அதாவது, சரண்யா கதாப்பாத்திரத்தில் ஜனனி நடித்திருக்கிறார். காதல், நட்பு, ஆக்ரோஷம் என உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு பெண்ணை முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து, சமூகத்தில் பணம் படைத்தவர்கள், எளியவர்களுக்கு எதிராக எப்படி நீதியை வாங்குகிறார்கள் என்பதை, ஆக்ஷன் சென்டிமென்ட், த்ரில்லர் கலந்து விருவிருப்பாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். ஆனால் நீதிமன்ற காட்சிகள் டீவி தொடரைவிட மோசமாக நகர்கிறது.

நீதிமன்ற காட்சியில் சபிதா ஆணந்த் நடிப்பு காண்போரை கண்கலங்கச் செய்கிறது. அதேபோல் தப்பு செய்த மகனை நிரபராதி என பணத்தை வைத்து விளையாடும் தந்தை கதாப்பாத்திரத்தில் சிவன் சீனிவாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். ரமேஷ் கண்ணா, விசாகன், கௌசிக் திவ்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



