விமர்சனம்

“ஹபீபி” அனைவரும் காணவேண்டிய திரைப்படம் !

நேசம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சாகுல் ஹமீது, கோவை இப்ராஹிம் தயாரிப்பில், ஈஷா, மாளவிகா மணோஷ், தனஶ்ரீ, கஸ்தூரிராஜா, அனு ஸ்ரேயா ராஜன், ஜெயஶ்ரீ பானு ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில், ரோமியோ பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் “ஹபீபி”.

கதைப்படி.. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய கிராமத்தில் 1980 காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. அந்த ஊரே நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கண்ணாடி வாப்பா குடும்பத்தைச் சேர்ந்த யூசுப் ( கஸ்தூரிராஜா ) தனது மகன் அபுதாஹிர் ( ஈஷா ), இரண்டு மகள்கள் மற்றும் தம்பியுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துவருகிறார். காலப்போக்கில் நெசவுத் தொழில் நலிவடைந்த நிலையில், ஊரிலுள்ள பெரும்பாலானோர் வெளிநாடு சென்றுவிடுகின்றனர்.

யூசுப் தன் உயிர் உள்ளவரை நெசவுத் தொழிலை கைவிட கூடாது என்கிற மனநிலையில் இருக்கிறார். வருமானம் குறைவாக இருப்பதால் அவரது தம்பி வெளிநாடு செல்கிறார். மகன் அபுதாஹிர் படித்து முடித்து விட்டு குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் யூசுப். ஆனால் அபுதாஹிர் இளம் வயதிலிருந்து தன்னுடன் படித்த நிலோஃபர் ( மாளவிகா மணோஷ் ) மீது காதல் கொண்டு சுற்றித்திரிகிறான். நிலோஃபரை பார்ப்பதற்காக நண்பர்களுடன் அந்த ஊரையே சுற்றிச் சுற்றி வருகிறான் அபுதாஹிர். ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக பிரச்சினையில் சிக்கி, அபுதாஹிர் ஊர் பஞ்சாயத்தில் அவமானப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

யூசுப் குடும்பம் வறுமையிலிருந்து விடுபட்டதா ? நிலோஃபர், அபுதாஹிர் காதல் என்னானது ? என்பது மீதிக்கதை..

நாயகன் ஈஷா படத்தின் முதல் பாதியில் இளமையான தோற்றத்தில் ஒரு கிராமத்து இளைஞனாக அதாவது கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதேபோல் இரண்டாம் பாதியில் உடல் எடையை அதிரித்தோடு, 45 வயது மனிதனாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலியை பார்ப்பதற்காக சென்றபோது, பிரச்சினையில் சிக்கி ஊர் மக்கள் முன் அவமானப்பட்டு அடிவாங்கும் போது, அவரது நடிப்பு பிரமாதம். தனது முதல் படத்திலேயே நடிப்பின் மீதுள்ள தாகத்தால் நீண்டகால நடிகர் போல் ஸ்கோர் செய்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

அதேபோல் இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியலை சினிமாத்தனம் இல்லாமல் எதார்த்தமாக பதிவுசெய்த இயக்குனரையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

இதுவரை கிராமங்களின் வாழ்வியலை மண் மனம் மாறாமல் பதிவுசெய்து இயக்குனராக அறியப்பட்ட கஸ்தூரிராஜா, தனக்குள் இருந்த நடிப்பு தாகத்தை வெளிப்படுத்தி நல்ல நடிகனாக உருவெடுத்திருக்கிறார்.

படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதேபோல் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் பணிகளும் சிறப்பு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் காண வேண்டிய படம் வெளிவந்துள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் இந்த படத்தின் கதாப்பாத்திரங்கள் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடந்தகால நினைவுகளை கட்டாயம் ஞாபகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button