“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

அஸ்ருதா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ரோபோ சங்கர், சிபி புவனசந்திரன், கீர்த்தனா, கவிதா ரமேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், கணேசன் நாச்சிமுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஈகோ ராமன்”.
கதைப்படி.. கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், பட்டப்படிப்பை முடித்து விட்டு, அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற தனது தாயின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக குரூப்-1 தேர்வுக்காக தயாராகி வருகிறார் நாயகன் சிபி புவனசந்திரன். குடும்ப வறுமை காரணமாக பகுதிநேர ஆசிரியராகவும் வேலை பார்க்கிறார். இந்த சமயத்தில் கல்லூரி மாணவி கீர்த்தனாவுக்கும் இவருக்குமிடையே காதல் மலர்கிறது.

இதற்கிடையில் வீட்டில் ஒரு குழந்தைபோல் வளர்த்த நாயை யாரோ அடித்து கொன்று விடுகிறார்கள். அதனை விசாரித்து தேடிப்போகையில், தனது வாழ்க்கையில் இன்ஸ்பிரேசனாக நினைத்து வாழும் தனது இளம் வயது ஆசிரியர் ராமனை ( ரோபோ சங்கர் ) சந்திக்கிறார். ஆனால் தற்போது முற்றிலும் மாறுபட்ட மனிதராக, தான் என்கிற அகந்தையுடன், தன்னை மிஞ்சி யாரும் இருக்க கூடாது என்கிற ஈகோ மனப்பான்மையுடன் கர்வமாக வாழ்ந்து வருகிறார்.
பிரிதொரு சந்தர்ப்பத்தில் ஆசிரியர் வீட்டிற்கு செல்லும்போது, தனது காதலி அங்கே இருக்கிறார். இருவரும் சந்தித்து நெருக்கமாக பழகுவதை பார்த்த ஆசிரியர் சிபி மீது கோபமடைந்து, மகளை அடித்து உதைத்து உனக்கெல்லாம் என் மகள் வேண்டுமா ? உயர் ஜாதி வன்மத்தை வெளிப்படுத்துகிறார். காதலர்கள் இருவரும் பிரிகிறார்கள்.
நாயகன் தனது தாயின் லட்சியத்தை நிறைவேற்றினாரா ? பிரிந்த காதலர்கள் இணைந்தார்களா ? இல்லையா ? என்பது மீதிக்கதை..

கிராமங்களில் வெளியில் தெரியாமல் நடைபெறும் சாதிய பாகுபாடு, பள்ளி ஆசிரியர்களின் ஈகோ, வாலிப வயதில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் காதல், நட்பு, வறுமை என அழகான கதையை உருவாக்கிய இயக்குனர், திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கலாம்.
ரோபோ சங்கர் முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து, தனது திரைப்பயணத்தில் முத்திரை பதித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தை பார்க்காமலேயே மறைந்துவிட்டார்.
சிபி புவனசந்திரன், கீர்த்தனா, கவிதா ரமேஷ் மூவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.




