அரசியல்

பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் “பொய்க்கால் குதிரை” ஆட்சி !.? அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் !

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தொடர்பாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பத்து வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது.

சிறுமி காணாமல் போன சில மணி நேரத்திலேயே புகார் அளிக்கப்பட்டிருந்த போதிலும், துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாதது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக திறனில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது.

பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு ஏதுமறியா சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை அரசின் அலட்சியத்தையும் செயல்திறன் குறைவையும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன்,

குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

மேலும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.

இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால், “தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ?”

சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,

தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button