திருப்பூரில்.. தொழிலதிபரின் தலையீட்டால், திமுக மாவட்ட செயலாளர் ராஜினாமா !

திருப்பூர் திமுக வின் முன்னாள் மேயரும், முன்னாள் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கா. செல்வராஜ் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தில் கூறியதாவது, நான் 1976 ஆம் ஆண்டு தொடங்கி 50 வருட காலமாக கழகத்திற்கு விசுவாசமாக இருந்தேன். முதன்முதலாக 1976-ல் என்னை தொழிற்சங்கத்தில் இணைத்துக் கொண்டு தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக கழகத்தின் சார்பாக முன்நின்று போராடினேன் மேலும் நகர செயலாளராகவும் தொடர்ந்து பணியாற்றினேன்.
அதன் பின்னர் மக்களின் அன்பைப் பெற்ற எனக்கு நகர சேர்மன், மேயர் போன்ற பொறுப்புகளை தலைவர் கலைஞர் அவர்களும் நீங்களும் அளித்தீர்கள். பின்னர் படிப்படியாக முன்னேறி மாநகர செயலாளர் ஆகவும் மாவட்ட செயலாளராகவும் தொடர்ந்து 2011 முதல் தற்போது வரை செயல்பட்டு வருகிறேன். கழகம் எதிர்க்கட்சியாக இருந்த பத்தாண்டு காலத்தில் மக்கள் மற்றும் கழகப் போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றதால் பல வழக்குகளை எதிர்கொண்டேன். பின்னர் 2021 ஆம் ஆண்டு திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

கடந்த ஐந்து வருடமாக சட்டமன்ற உறுப்பினராகவும், மாவட்ட செயலாளராகவும் மனசாட்சி படி திறம்பட செயலாற்றினேன். இருப்பினும் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகள் வழங்கப்பட்டன. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருப்பூரில் உள்ள முக்கியமான தொழிலதிபரான டாலர் மணி தங்களிடம் வற்புறுத்தியதன் பெயரில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் சார்பாக போட்டியிட மாற்றுக் கட்சியிலிருந்து வந்து திருப்பூர் மாநகராட்சி மேயராக இருந்த தினேஷ்குமாரை, மேயர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினீர்கள்.

இது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. தொழிலதிபர் மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த தினேஷ்குமார் ஆகியோருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை 50 ஆண்டு காலமாக கழகம் இக்கட்டான சூழலில் கட்டிக்காப்பாத்திய இந்த கழக விசுவாசிக்கு ஏன் கொடுக்கவில்லை? 50 வருட பொதுவாழ்வில் எனக்கு அரசியல் தவிர வேறு எதுவும் தெரியாது மக்கள் பணி மட்டுமே எனக்கு முதன்மையாக இருந்தது தற்போதைய நிகழ்வுகளால் மிகுந்த மன வேதனையோடு இன்று முதல் திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.. எனவும் தெரிவித்துள்ளார்.




