“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

பி.வி. ஃப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் பி.வி சர்மிளா தயாரிப்பில், ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, கருடா ராம், ஶ்ரீமன், சத்யன் உள்ளிட்டோர் நடிப்பில், பாபு விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “சட்டென்று மாறுது வானிலை”.
கதைப்படி.. ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ராமச்சந்திரன் நண்பர்களுடன் மது அருந்துவதற்காக பப்புக்கு செல்கிறார். அங்கு ஜானகி ( மீனாட்சி கோவிந்தராஜன் ) பார்க்கிறார். கண்டதும் காதல் கொள்கிறார். பின்னர் இருவரும் காதலர்களாகி உடனே திருமணமும் செய்து கொள்கின்றனர். இருவரது பின்புலமும் இருவருக்கும் தெரியாது. இருவரும் தேன்நிலவிற்காக கொடைக்கானல் சென்று தனியார் ரிசார்ட்டில் தங்குகிறார்கள். பின்னர்தான் தெரியவருகிறது ஜானகி அமைச்சரின் மகள் என்பது. மேலும் ஜானகி அமைச்சரின் மகள் என்பதால் காவல்துறையினரும் தேட ஆரம்பிக்கிறார்கள்.

இதற்கிடையில் இவர்கள் தங்கியிருக்கும் ரிசார்ட் அதிபர் ராஜூ ( கருடா ராம் ) தன்னுடைய ரிசார்ட்டிற்கு வரும் இளம் ஜோடிகளின் அந்தரங்க சமாச்சாரங்களை ரகசியமாக படம்பிடித்து, இணையத்தில் வெளியிட விலை பேசுகிறார். இந்த விஷயம் ராமச்சந்திரனுக்கு தெரியவர மனமுடைந்து போகிறார்.
மேலும் ராமச்சந்திரன், ஜானகி தங்கியிருக்கும் வீட்டிற்கு உடன் பணிபுரியும் யோகி பாபு உள்ளிட்ட நண்பர்கள் ஜானகியின் பிறந்தநாளில் வாழ்த்துவதற்காக வருகின்றனர். எதிர்பாராத தம்பதியர் இருவருக்கிடையே பிரச்சினையாகி ஜானகி பிரிந்து செல்கிறார்.

பின்னர் ரிசார்ட் அதிபரிடம் உள்ள அந்தரங்க விஷயங்களை கைப்பற்றினாரா ? பிரிந்து போன மனைவியிடன் இணைந்தாரா ? என்பது மீதிக்கதை..
படத்தின் முதல்பாதியில் ஜெய் விஜய்யின் மேனரிசம் செய்வது ரசிக்கும்படியாக இல்லை என்றாலும், அவரது கதாபாத்திரத்திற்கு ஒத்துப் போகிறது. எதிர்பார்த்த அளவிற்கு ஜெய் ஒன்றும் வித்தியாசமாக எதையும் சாதிக்கவில்லை என்றே சொல்லலாம். இரண்டாம் பாதி ஓரளவு த்ரில்லிங்காக செல்வதும், க்ளைமாக்ஸ் காட்சியில் ஜெய்யின் நடிப்பும் பாராட்டப்பட்டது.

மீனாட்சி கோவிந்தராஜன், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல் வில்லன் கருடா ராம் கதாப்பாத்திரம் மூலம் வித்தியாசமான தொழில்நுட்ப நுணுக்கங்களால் மக்கள் எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதை இயக்குனர் சொல்லியிருக்கிறார். அவரது நடிப்பும் சிறப்பு. யோகி பாபுவின் கதாப்பாத்திரம் ஓரளவுக்கு ரசிக்கும்படியாக இருக்கிறது.
மற்றபடி முக்கிய காதாப்பாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்பில் செயற்கைத் தனம் நிரம்பி வழிகிறது. இயக்குனர் வேலை வாங்க தவிறியிருப்பது நன்றாகவே தெரிகிறது.




