பழனி கோவில்.. நிலமோசடிக்கு காரணமான அதிகார மையம் !.? சிபிஐ விசாரணை வேண்டி கோரிக்கை !

பழனி முருகன் கோவில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த அதிகாரியை நீதிமன்றம் பணியிடை நீக்கம் செய்துள்ள செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, இந்த வழக்கை தமிழ்நாடு முதலமைச்சர் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல. தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல் !

இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை ? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது ? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா ? இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு அதிகார மையம் தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே அதிகார மையம் என்று சொன்ன முதலமைச்சர் அவர்களே, இந்த ஊழலில் பின்னால் யார் அந்த அதிகார மையம் ?
அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனை பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா ? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த அதிகார மையம் ?
இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது. நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி கே. பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.




